Sunday, 31 May, 2009

அம்மாவா…மாமியாவா…

காஞ்சனாவுக்கு கண்ணைக்கட்டி காட்டுல விட்டது போலிருந்தது இவ்வளவு பேரு இருந்தும் நமக்கு உதவிக்கு ஆளு இல்ல , என்ன செய்யுறது. காஞ்னாவுக்கு அப்படியொரு நெனப்பு. அவரவர் வேலையெ, அவரவர் செய்தாதான் நல்லது. எந்த நாயையும் எதிர் பார்க்க கூடாது என்று அடிக்கடி சொல்வாள். இது அவளின் உச்சக்கட்ட வெறுப்பின் வெளிப்பாடு.

நாகர்கோவில் பஸ்ஸிற்காக மாட்டுத்தாவணியில் வெகு நேரமாக காத்திருந்தாள் . பஸ் நேரத்துக்கு வராததும் ஒருவகையில் அவள் வெறுப்புக்கு காரணம் . சென்னை டு நாகர்கோவில் பஸ் வந்து நின்றது.

காஞ்சனா பஸ்ஸின் படியில் காலடி வைத்தாள்.

எங்கம்மா போகனும்… கண்டக்டர் கேட்டார்.

நாகர்கோவில்

போம்மா போயி மூணாவது சீட்ல உக்காரு.

இந்த கண்டக்டருக்கு மரியாதையா கூட பேசத் தெரியலை.
மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் அவனிடம் அதற்காக சண்டை போடும் நிலைமையில் இல்லை. என்ன இவங்கிட்ட கடனா வாங்கிருக்கோம் …நீ…நான்னு மரியாதை இல்லாம பேசுறான். மரியாதை தெரியாத பயலுக்கெல்லாம் கவர்மென்டு உத்தியோகம். இருக்கையில் அமர்ந்தபடியே சன்னல் கதவை சற்று தள்ளினாள். குளிர்ந்த காற்று வெதும்பிய மனதுக்கு சற்று இதமாக இருந்தது.

நீ …எங்கம்மா போகனும்…
ஏய்யா …மொதல்ல மரியாதையா பேச கத்துக்கோ .

நாகர்கோவில்.

ரைட் போகலாம்…மூணாவது சீட்ல போயி அந்த அம்மா கூட உக்காரு.

இவங்களுக்கு என்னத்தை சொன்னாலும் மரியாதை கொடுத்து பேச தெரியாது.

கோபத்தில் கதவை இழுத்து சாத்தினார் கண்டக்டர். சட்டையில் கீழே இரண்டு பித்தான் மட்டும் மாட்டப் பட்டிருந்தது . உள்ளே அழுக்கு பனியன் தெரிந்தது.

டிக்கெட்…டிக்கெட்

காஞ்சனாவுக்கும் சகுந்தலாவுக்கும் டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு டிரைவர் அருகில் போய் அமர்ந்தார்.

எங்கம்மா போறீக காஞ்சனா கேட்டாள்.

நாகர்கோவில்

நீங்க?

நானும் நாகர்கோவில்தான்.

மதுரையிலதான் ஏறுனீங்களா…

ஆமா…

சொந்த ஊரே மதுரையா?

ஆமா…

நீங்க …காஞ்சனா கேட்டாள்.

நானும் மதுரை தான் . மகன் வீட்டுக்கு போறேன் . மகன் வீட்டுக்கு போறேன்னு சொல்றதை விட மகனைப் பாக்க போறேன். அவந்தான் வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போகனும்.

ஏம்மா…இதுவரை வீட்டுக்கு போனதே இல்லையா?

அதை ஏம்மா கேக்குறீங்க . பெத்த மனசு பத்தி எரியுது. முப்பது வருசம் படிக்க வச்சு… பாடவச்சு…அவனை வளத்து ஆளாக்க, எவளோ ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். அவங்கெ ப்ரெண்டு சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுக்கா இவங்களெ இப்படி பாத்து பாத்து வளத்தோம்.

காஞ்சனா தன் வீட்டு கதையை சொல்ல வேண்டுமென்று நினைத்து வார்த்தை வாய் வரை வந்து விட்டது அடக்கிக் கொண்டாள்.

இவன் ஒருத்தன் தாம்மா ஆரம்பத்துல இருந்து சொன்னபடி கேக்கமாட்டான். ஆரம்பத்துலேயே கண்டிச்சுருக்கனும் எங்களாலே முடியாமப் போச்சு . நாங்க இப்ப ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்குது . ஊரு உலகத்துல பிள்ளைக அம்மா அப்பாவோட எவ்வளவு அன்பா இருக்கிறாங்க …அதையெல்லாம் பாக்கும் போது பொறாமையா இருக்கு . அவன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பாக்கனும்னு எவ்வளவு ஆசை எங்களுக்கு இருந்திருக்கும். எல்லாம் தவிடு பொடியாச்சு.

பஸ்ஸை கோவில்பட்டி பைபாசில் காலை உணவுக்காக நிறுத்தினர்.

காஞ்சனா கொண்டு வந்திருந்த இட்லியில் இரண்டை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள் .

வேண்டாம்மா…காலையில எப்பவுமே நான் சாப்பிடுவது இல்லை. நீங்க சாப்பிடுங்க.

பயணம் செய்யும் போது வெறும் வயித்தோட இருக்க கூடாது . ரெண்டு சாப்பிடுங்க .

வேண்டாம்மா…எனக்கு ஒன்னும் செய்யாது.

பயப்படாதீங்க…முன்னப்பின்னே தெரியாதவங்ககிட்ட எப்படி சாப்பிடுறதுன்னு நினைக்காதீங்க.

அதுக்கில்லம்மா…எனக்கு வேண்டாம்…

சாப்பிட்டு முடித்து பவண்டோ பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தாள்.

டிரைவர் வண்டியில் ஏறி கதவை இழுத்து சாத்தினார். பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார். ஆங்காங்கே நின்றிருந்த பயணிகள் ஓடி வந்து ஏறிக் கொண்டனர். பஸ் பைபாஸ் ரோட்டில் ஏறி வேகமெடுத்தது.

நீங்க என்ன விசயமா நாகர்கோவில் போறீக. சொந்தக்காரக வீட்டுக்கா போறீக. சகுந்தலா கேட்டாள்.

இல்லம்மா…பொண்ணு அங்கே இருக்கா…பாக்கலாம்னு போறேன் .

இதுக்கு முன்னாடி போயிருக்கீகலா? எங்கே இருக்காக.

போயிருக்கேன் …ஆனா …இடமெல்லாம் தெரியாது . பஸ்டான்ட்ல இறங்கிட்டு போன் பண்ணுன்னா வந்து கூட்டிப் போயிருவாக.

நானும் அப்படித்தான் இறங்கினதும் போன் செய்யனும் . மகன் வந்து கூட்டிப் போவான் . மற்றபடி அவன் எங்கே இருக்கான் . என்ன செய்யுறான்னு எதுவும் தெரியாது . சொல்லவும் மாட்டான். புறப்படும் போது கூட போன் செய்தப்போ வர வேண்டாம்னுதான் சொன்னான். ஆசையா வாம்மான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்னுட்டான்.

அப்புறம் எதுக்கு போறீங்க . வரவேண்டாம்னு சொன்னதுக்கப்புறம் போறது சரியா?

சரியா தவறான்னு பெத்த பிள்ளைகிட்ட ஆராய்ச்சி பண்ண முடியுமா? அவன்தான் புரியாமப்பேசுறான்னா, நாம எப்படி சும்மா இருக்க முடியும். என்ன பண்றான் எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கிறது நம்ம கடமையில்லையா?

அதுவும் சரிதான்…

சொல்லிவிட்டு சன்னல் வழியாக பசுமையான இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தவாறு வந்தாள். காஞ்சனாவின் செல்போன் சினுங்கியது.

ஹலோ…சொல்லுப்பா

எங்கத்தை இருக்கீங்க…

திருநெல்வேலி தாண்டி வந்துக்கிட்டு இருக்கேன்.

அத்தை …நீங்க நாகர்கோவில் உள்ளே நுழைஞ்சவுடனே எனக்கு போன் செய்திருங்க. அப்ப நான் வர சரியா இருக்கும்.

சரிப்பா…நான் போன் பண்றேன்.

மருமகன்…பஸ்டான்டு வந்து கூட்டிப் போறேன்னு சொல்றார்.

சகுந்தலா தனது போனை எடுத்து மகனுக்கு தொடர்பு கொண்டாள் .

ஹலோ…நான்தாம்ப்பா…அம்மா பேசுறேன்…உன்னை பாக்க வந்து கொண்டிருக்கேன்டா…

ஏம்மா…நான்தான் சொன்னேன்ல வர வேண்டாம்னு எதுக்கு இப்ப வர்றே.

டேய் ஏம் மருமகளை பாக்கனும்டா…எனக்கு ஆசை இருக்காதா…சொல்லு . வீடு வாசல பாத்து இப்படி அப்படி இருக்கனும்னு பெரியவங்க சொன்னா தாண்டா சின்னப்பிள்ளைகளுக்கு தெரியும் அதுக்குதாண்டா நான் வர்றேன்னு சொல்றது.

இங்க பாரும்மா…நான் ரொம்ப பிஸியா இருப்பேன் . நீ கூப்பிட்ட உடனே வந்து கூட்டி போகலைன்னு என்னை குறை சொல்லக்கூடாது. சரி நாகர்கோயில் வந்துட்டு கூப்பிடு. போனை வச்சிரு. வேண்டா வெறுப்பாக பேசினான்.

பெத்த பிள்ளைக பாருங்க எப்படி இருக்குதுன்னு . சகுந்தலா நொந்து கொண்டாள். ஆரோக்கியமா இருக்கும் போதே இப்படி இருந்தாங்கன்னா வயசான காலத்துல என்ன செய்யக் காத்திருக்காங்களோ ! நெனச்சா பயமா இருக்கு.

ஆம்பளைப்பிள்ளைகளே இப்படித்தாம்மா…அதுகளை நம்ப முடியாது. அதான் வந்த மூணுமாசத்துலயே மாத்திப்புறாள்களே!.

நல்ல புள்ளைகளும் இருக்கத்தானேமா செய்யுதுக. நான் பெத்தபுள்ளே சரியில்ல . அவ்வளவு தான் நான் சொல்லமுடியும்.

பஸ் நாகர்கோவிலுக்குள் நுழைந்தது.

தம்பி…நான்…அம்மா…நாகர்கோவில் வந்துட்டேன்டா. சீக்கிரம் வந்துருப்பா… சரியா…எங்க நிக்க…

மணிக்கூண்டு பக்கத்துல நில்லு வச்சுரவா…

காஞ்சனா …போன் செய்தாள்…நான்தான் பேசுறேன் நாகர்கோவிலுக்கு வந்துட்டேன்.

அப்படியா அத்தை…ரொம்ப சீக்கிரமா வந்துட்டீங்க…பஸ் நிக்கிற இடத்துலேயே நில்லுங்க உடனே வந்துர்றேன்.

பஸ்டாண்டில் பஸ் வந்து நின்றது.

சரிம்மா…அப்ப… பாப்போம் போய்வர்றீகளா…காஞ்சனா சகுந்தலாக்கு விடை கொடுத்தாள்.

நீங்க…

மருமகன் இங்கயே நிக்க சொல்லிருக்கார்.

அப்ப சரிம்மா …நான் வர்றேன். ஏம்பிள்ளைதான் மணிக்கூண்டுக்கிட்ட வைட் பண்ண சொல்லிருக்கான். ஏப்ப வர்றானோ… முனகிக் கொண்டே நடையைக் கட்டினாள்.

மணிக்கூண்டுஅருகில் நின்று கொண்டு காஞ்சனாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பாவம் தெரியாத ஊருல வந்து இந்த அம்மா தனியா நின்னுக்கிட்டு இருக்கு . மருமகன் எப்ப வர்றானோ.

சிறிது நேரத்தில் காஞ்சனாவின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

பரவாயில்லை…இந்தம்மா யோகக்காரிதான் சொன்ன மாதிரி மருமகன் உடனே வந்துட்டான்.சகுந்தலா மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

ஆட்டொவிலிருந்து இறங்கி காஞ்சனாவின் பையை வாங்கி ஆட்டோவில் வைத்து சற்று திரும்பினான்.

அட…நம்ம பய மாதிரி இருக்கு …அவளா இவ…

டேய்…டேய்…கதிரேசா…அய்யோ அவனைக் கூப்பிடுங்களேன். கூட்டத்தை பார்த்து கை காட்டினாள். டேய் கதிரேசா…கதிரேசா…கத்திக் கொண்டே ஓடினாள்.

ஆட்டோ சட்டென்று வேகமெடுத்தது…பின் மறைந்தது.

ஒரு மணி நேரம் …ரெண்டு மணி நேரம்…காலம் கடகடவென்று ஓடியது. கதிரேசனிடமிருந்து எந்த சலனமுமில்லை.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை.

அடப்பாவி…நீயெல்லாம் ஒரு பிள்ளையா! பெத்த அம்மாவை கண்கலங்கவிடுறவன் எப்படி பொண்டாட்டியை வச்சு காலம் தள்ளப் போறே…கண்களில் கண்ணீர் கடலாய் நிற்க, தனது பையை தூக்கிக்கொண்டு வந்த பஸ்ஸிலேயே மீண்டும்காலடி எடுத்து வைத்தாள் சகுந்தலா.

இதையும் படிக்கவும்....

பெற்ற மனம்…


Saturday, 16 May, 2009

காட்டுராஜா…வழி காட்டுராஜா

குகைக்குள் தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தது. சொந்த பந்தங்கள் என்று உருவாவதற்கு முன் தீப்பந்தங்கள் தான் மனிதனுக்கு துணை.

காட்டுராஜாவும் காட்டு ராணியும் அந்த குகையில் தனியாக இருந்தனர் . குகை வாயிலை யாரோ பிராண்டுவது போல சத்தம் .

சிங்கம்…ஒன்றும் செய்ய வேண்டாம் …தைரியமாக இரு…அதனால் குகை வாசலில் உள்ள கல்லை புரட்டி போட்டு விட்டு உள்ளே நுழைய முடியாது . நீ போய் தைரியமாக தூங்கு. காட்டு ராஜா சொன்னான்.

அதை கொன்று போட்டு விட்டால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கலாம் . என்ன சொல்கிறீர்கள்.

புரியாமல் பேசுகிறாய் . அந்த ஒரு சிங்கத்தை இப்போது கொன்றுவிட்டோமென்றால் ஒரு சிங்க கூட்டமே இங்கு வந்துவிடும் .பிறகு நம்மால் வெளியே செல்ல முடியாது . அத்தனை சிங்கங்களையும் நம்மால் சமாளிப்பது என்பது சிரமம்;

உள்ளே வந்து விட்டால் என்ன செய்வது

வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தால் பார்த்து கொள்வோம்.

சிங்கம் பசியோடு இருக்கும் போது தான் உணவுக்காக மற்ற மிருகங்களையும் மனிதர்களையும் தாக்கும் . பொதுவாக அது ஒரு சோம்பேறி மிருகம். பசி கூடுதலாகும் போது தானாக வேறு எங்காவது சென்று விடும் வேட்டையாடுவதற்கு . அதனால் ,தைரியமா நீ தூங்கலாம்.

இப்படியொரு வாழ்க்கைக்கு நாம் முடிவு கட்டவேண்டும். நாம் ஏன் மற்ற மனிதர்களையும் சேர்த்துக்கொண்டு கூட்டமாக வாழக்கூடாது.
கூட்டமாக வாழ்ந்தால் இந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்லாமே!

பாருங்கள் …இவையெல்லாம் மனிதர்களின் எழும்புக் கூடுகள் தான் . எத்தனை மனிதர்கள் கொடூர மிருகங்களால் தாக்கப் பட்டிருக்கிறார்கள் பாருங்கள். இது போன்ற காட்சிகள் எத்தனை குகைகளில். குழந்தையின் குரல்வளையை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தையிடமிருந்து அக்குழந்தையை அவன் தந்தையால் காப்பாற்ற முடிந்ததா? இல்லையே.

நல்ல யோசனை …நாளை ஒவ்வொரு குகையாக சென்று பேசிப்பார்ப்போம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. ஏனென்றால் குகையை நெருங்கும் போது பகையாளி வருகிறான் என்று வாளையும் கோடரியையும் உயர்த்தி பிடிப்பார்கள் . சில இடங்களில் யுத்தம் கூட செய்ய வேண்டி வரும் . இவற்றையெல்லாம் சமாளிக்க போதும் போதும் என்றாகி விடும்.

யுத்தம் செய்ய வேண்டியது வந்தாலும் பரவாயில்லை . தைரியமாக போரிட்டு அவர்களை தங்களது அடிமையாக்கிவிடுங்கள் . அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்டபார்கள் அல்லவா ?

நிச்சயமாக…கேட்டுத்தானே ஆக வேண்டும்.

சரி…நீ …போய் தூங்கு…

வேண்டாம் …நீங்கள் சொன்னது போல அந்த மிருகம் போய்விட்டால் அதன் பின் இருவரும் தூங்கலாம். நான் சொன்னதை உடனே செய்யுங்கள். நாமெல்லாரும் கூட்டமா வாழ்வோம். அப்போது தான் மிருகங்களிடமிருந்து தப்ப முடியும்.
பகலில் உறங்குவோர் இரவில் பாதுகாக்கலாம் . இரவில் உறங்குவோர் பகலில் பாதுகாக்கலாம்.

சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் கேட்டு பின் மறையத்தொடங்கியது.

பார்த்தாயா …சிங்கம் போய்விட்டது. அதற்கு பசி அதிகமாகிவிட்டது. இங்கு நின்றிருந்தால் எதுவும் கிடைக்காது என்று பொறுமையிழந்து போய்விட்டது. பொறுமை காத்த நமக்கு வெற்றி.

உனது ஆலோசனை எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இது வரை யாருக்கும் இந்த ஆலோசனை வரவில்லை. வந்திருந்தால் நாம் தன்னந்தனியாக இந்த இருண்ட குகையில் அடைந்து கிடக்க தேவையில்லை. இப்போது உனது ஆலோசனைப் பற்றிய சிந்தனையால் எனக்கு முற்றிலுமாக தூக்கம் போய்விட்டது. எப்போது விடியும் என்று காத்திருக்கிறேன்.

பேசிக் கொண்டே இருவரும் அயர்ந்து தூங்கிவிடடனர். அதிகாலை மிருகங்களின் சத்தமும், பறவைகளின் ஒலியும் , அருவியின் சலசலப்பும் அவர்களின் தூக்கத்தை கலைத்தது . எழுந்து இருவரும் சேர்ந்து குகைவாயிலில் வைத்திருந்த கல்லை நகர்த்தினர். வெளியில் வந்து சுத்தமான காற்றை சுவாசித்தனர்.

மிருகங்களுக்கு மத்தியில் ஒரு நாள் ஒரு யுகம். இந்த நிலைமை மாற வேண்டும்.

அம்பை எடுத்து வில்லில் தொடுத்து குறி பார்த்து எய்தான் . கனி கொத்தாக விழுந்தது. ஆகா அற்புதமான காலை ஆகாரம் . கொடூர மிருகங்கள் மட்டும் இல்லையென்றால் வாழ்வதற்கு அற்புதமான பகுதி .

சரி சீக்கிரம் புறப்படுங்கள் . எல்லோரும் வேட்டைக்கு சென்று விடப் போகிறார்கள் . அப்புறம் யார் கூடப் போய் பேசுவது . குழந்தைகளும் பெண்களும் மட்டும்தான் குகையில் இருப்பார்கள் . அவர்களும் நம்மைக்கண்டு வெளியில் வர அஞ்சுவார்கள். அதனால் சீக்கிரம் போக வேண்டும் . காட்டுராணி அவசரப்படுத்தினாள்.

இதோ அவ்வளவு தான் புறப்பட்டுவிட்டேன்.

பக்கத்து குகையை நோக்கி சென்றனர் .

யார் குகையில?

யார் நீ! கேட்டவாறே . ஒரு வயதான மனிதன் எட்டிப்பார்த்தார்.

வேறு யாரும் இல்லையா?

எதுக்கு கேட்கிறாய் சொல்.

எதிர் காலம் பற்றி பேச …

எதிர் காலம் பற்றி பேசுவதற்கு நீ யார்

நான் காட்டுராஜா, இவள் என் மனைவி

உன்னை காட்டுராஜா என்று யார் அழைத்தது.

நானாக வைத்துக் கொண்ட பெயர்.

எதிர் காலத்துக்கு என்ன வந்தது.

எதிர் காலத்துக்கு ஒன்றும் வரவில்லை எதிர் காலத்தில் வாழப் போகும் சந்ததி பற்றி கவலை .

நான் இந்த குடும்பத்தலைவன் என்னிடம் சொல் …என்ன சொல்ல வந்தாய்.

வேறு இளைஞர்கள் …

நிறையவே இருக்கிறார்கள் . நான் சொன்னால் கேட்பார்கள்.

அப்படியானால் சரி …சொல்கிறேன்.

காட்டுராஜா திட்டத்தை சொன்னான் .

திட்டம் சரிதான் …அதற்கு நீ ஏன் தலைவனாக இருக்க வேண்டும் . நாங்கள் இங்கு முப்பதுக்கும் மேற்படடோர் இருக்கிறோமே !. எங்களில் ஒருவர் தலைவராக இருந்தால்…என்ன நான் கேட்பது சரிதானே.

முப்பது பேர் இருந்தும் நீங்கள் நிம்மதியாக தூங்குகிறீர்களா .

ஆமாம்…எங்களை நாங்களே பாது காத்துக் கொள்கிறோம் .

அப்படியென்றால் மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு அரவனைத்து செல்லாதது ஏன்?

அது எங்களுக்கு தேவையில்லாதது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்.

அப்படியா…

காட்டுராஜா…பேசிப்பயனில்லை…வாருங்கள் வேறு குகை நோக்கி செல்வோம் .

அதுவும் சரிதான்.

இருவரும் பக்கத்தில் உள்ள குகை நோக்கி சென்றனர்.

குகையில் யாரு ?

ஒரு பெண் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

என்ன வேண்டும்? எங்கிருந்து வருகிறீர்கள்.

பக்கத்து குகையிலிருந்து . என் பெயர் காட்டுராஜா இவள் என் மனைவி .

சொல்லுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக குகையில் பயந்து பயந்து வாழ்வதற்கு பதில் நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நன்றாகத்தானிருக்கும். ஒவ்வொருவரையும் சேர்ப்பதற்கு போதும் போதும் என்றாகிவிடும் . அது தான் யோசிக்க வேண்டியது

அது புரிகிறது . நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் .

நல்ல யோசனை . நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.

எங்களுடன் சேர்ந்தால் போதும் …உங்கள் பெயர் சொல்லுங்கள்.

வேங்கை வென்றான்…

நல்ல பெயர்…நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்களா?

இல்லை…இங்கே பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள்.

அவர்ளையும் கூப்பிடுங்கள்.

வேங்கை வென்றான் அழைக்க அனைவரும் வந்து சேர்ந்தனர் . அனைவரும் ஒருங்கினைந்து பக்கத்து குகைக்கு சென்று பேசி அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆற்றங்கரை ஓரமாக சென்று இளைப்பாறினர். கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு மேல் காட்டு ராஜாவின் திட்டத்தை அங்கீகரித்து சமுதாயமாக சேர்ந்து வாழத்தொடங்கினர்.

ஓற்றுமையின் உயர்வை எடுத்து சொல்ல காட்டிலும் மேட்டிலும் எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்றார்கள் . பெரிய சமுதாயம் உருவானது.

குடிசை அமைத்து குடும்பம் குடும்பமாக வாழத்தொடங்கினர். மிருகங்கள் மனிதனை நெருங்கப் பயந்தன. காட்டுராஜாவும் காட்டுராணியும் மனித வாழ்க்கையின் மாற்றத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தனர்.

ஒரு நாள் காட்டு ராஜா ஆற்றங்கரை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். சட்டென காலில் ஏதோ எடறியது .குனிந்து பார்த்தான் . அடடா…வேங்கை வென்றான்…என்ன ஆயிற்று , அவனின் உடலை திருப்பினான். முதுகில் ஈட்டி பாய்ந்திருந்தது.
மனிதன் அன்று மிருகமானான். இன்றும் தொடர்கிறது.

Tuesday, 12 May, 2009

வண்ணநிலவு ...

வானம் கொடுத்தது வண்ணநிலவு
வண்ணநிலவுக்கு என்ன கனவு
மேகத்திரைக்குள்ளே முகம் காட்டி
மெல்ல சிரிக்குது வண்ணநிலவு

கானம் இசைத்ததிந்த வண்ணநிலவு
காற்றில் பறக்குதிந்த வண்ணநிலவு
வெட்டவெளி பொட்டலிலே இருக்கிறாய்
வெள்ளை நிற முத்தாக நீ சிரிக்கிறாய்

கடலிலே கண்ணாடி பார்க்கிறாய்
அலைநெற்றியில் பொட்டாக மிதக்கிறாய்
சூரியனைக்கண்டாலே மறைகிறாய்
நாளுக்குநாள் ஏனோ நீயும் குறைகிறாய

வானம் கொடுத்தது வண்ணநிலவு
வண்ணநிலவுக்கு என்ன கனவு
மேகத்திரைக்குள்ளே முகம் காட்டி
மெல்ல சிரிக்குது வண்ணநிலவு

Tuesday, 5 May, 2009

பொருமையே பூஷணம் (குருமதிமாலை )

வெறுமைகள கன்றுன்னுள்ளம்
நறுமணங் கமழ்ந்திடப்
பொருமை யென்றபூஷணமணி---சாந்தியுலவி
மறுமையில் பயனுறுவாய் நீ.


கருத்துரை:-

நீ வெறுமைகளற்று , வேற்றுமை பாராட்டாது உனதுள்ளம் நறுமணம் வீசிப் பறந்து , மேலும் பொருமையை ஆபரணமாகப் பூண்டுகொள்வாயானால், இம்மைப்பயனோடு மறுமைப்பயனும் பெற்றின்புறுவாய்!

வறுமைகள் வரினும்
பொருமை குன்றாதே.

Friday, 24 April, 2009

தெவசம்…

அப்பா…இறந்து ஒரு வருஷமாச்சு. காலம் போனதே தெரியல. இந்நேரம் அப்பா இருந்தா வீடு எவ்வளவு கலகலன்னு இருக்கும் . அதுக்கு கொடுத்து வைக்கலை. ஆனா அப்பா இருக்கும் போது இவ்வளவு சொந்தம் பந்தம் வந்ததில்லை. இன்னிக்கு சொந்தமெல்லாம் இருக்காங்க ஆனா அப்பா இல்ல. வசந்திக்கு வருத்தமாக இருந்தது.

பத்திலிருந்து பதினொன்னரை வரை நல்ல நேரம் திதி கொடுக்க அய்யரை இன்னும் காணாம், நேரம் ஆகிக்கிட்டு இருக்கு …முகுந்தா போன் பண்ணிப்பாரு பாட்டி சொன்னாள்.

அவள் சொல்லி முடிக்க, புரோகிதர் வாசலில் டிவிஎஸ் பிஃப்டியில் வந்து நின்றார்.

வாங்க…வாங்க

இந்த பையை கொஞ்சம் புடிங்கோ…செங்கல் மணலெல்லாம் தயாரா இருக்கா?

எல்லாம் தயாரா இருக்கு.

புரேகிதர் நடு ஹாலில் ஹோமம் வளர்த்தார். மந்திரங்களை உச்சரித்தார். ஹோமத்தில் நெய்யை வார்த்தார். தான் செய்வதையும் சொல்வதையும் ராமுவை சொல்லச் செய்தார். ராமுவை எழுந்து நின்று வணங்க செய்தார். வீடு முழுக்க ஹோமியம் தெளித்தார். அனைவரையும் ஹோமகுண்டத்தின் முன் விழுந்து வணங்க சொன்னார். அனைவரின் நெற்றியிலும் விபூதி சந்தனம் குங்குமம் வைத்தார். செல்லம்மாவை அழைத்தார் ஒரு கைப்பிடி அரிசி கொடுத்து உலையில் போடச் சொன்னார். அரிசி பருப்பு காய்கறி பணம் ஆகியவற்றை எடுத்து அவர் பைகளில் போட்டார்.

இதோ பாருங்க வருஷா வருஷம் திதி கொடுக்கிறது ரொம்ப விசேஷம். நம்ம ஒரு வருஷத்துக்கு கொடுக்கிற திதி அவாளுக்கு ஒரு நாள் சாப்பாடு. நம்மோட முன்னோர்கள் எல்லோரும் நாம கொடுக்கிற திதியை சந்தோசமா ஏத்துக்கிட்டு நம்மல ஆசீர்வாதம் பண்ணுவாங்க . அவாளோட ஆசீர்வாதம் நம்மளை வாழவைக்கும். சரி சாப்பாடு தயார் ஆனதும் காகத்துக்கு படைச்சுட்டு சாப்பிடுங்க.
இந்தா தம்பி இதையெல்லாம் கொண்டு போயி கால் படாத இடத்துல போட்டு வந்திரு . ஏதாவது தண்ணி இருக்கிற இடமா போட்டா ரெம்ப நல்லது. போட்டுட்டு திரும்பி பாக்காம வந்திருங்க. யாராவது அவரு கூட போங்க. அப்ப நான் கிளம்புறேன்.

வீட்ல பெண்களெல்லாம் சமையலில் கவனம் செலுத்த ஆண்கள் அரசியலிலும் நாட்டு நடப்பிலும் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர். அப்பாவைப்பற்றியும் அவ்வப்போது பேச்சு அடிபட்டது. அப்பாவைப் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் எனக்கு அவரது கம்பீர தோற்றம் கண்முன் வந்து நிற்கும் . என்னால இன்னும் மறக்க முடியலை . என்ன செய்ய!.

ஏய் …வசந்தி என்ன பண்றே …பாயாசத்தே கொஞ்சம் பாரு… புடிச்சிற போகுது. போதும்னா எறக்கிவச்சிரு. வாசனை வர்ற மாதிரி தெரியுது.

சரிம்மா …என்று அடுக்களையில் நுழைந்தாள் வசந்தி.

காகங்கள் கரைந்து கொண்டே வீட்டின் மதில் சுவர்களில் வந்து அமர்ந்திருந்தன. காகங்கள் நமது மூதாதையர்கள் என்பது ஐதீகம். அப்படியென்றால் நமது மூதாதையர்கள் நம்மை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா?. ஒரு நாளைக்கு எத்தனை காக்கா நம்ம வீட்டு கூரையில வந்து உக்காருது. மூதாதையர்கள் ஏன் காகமாக வந்து பிறக்க வேண்டும். ஒட்டு மொத்த மக்களின் மூதாதையரின் எண்ணிக்கையை விட காகங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே?. இன்று இங்கு வந்து உணவு அருந்திய காகமே நாளை பக்கத்து வீட்டுக்கும் செல்கிறதே. காகம் மூதாதையர் என்று சொன்னால் இன்று நமது மூதாதையர் நாளை எப்படி வேறொருவருக்கும் மூதாதையர் ஆவார்.
ஒரு குடும்பத்துக்கு ஒரு காகமா ? கூட வரும் காகமெல்லாம் அவர்களின் நண்பர்களா? எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இலையை இரண்டாக கிழித்து அதில் சாதம் சாம்பார்,ரசம், கூட்டு,பொரியல்,மோர், அப்பளம், பாயாசம் , என்று அனைத்து வகைகளையும் வைத்து மதில் மேல் வைத்தவுடன் ஒரு காகம் வேகமாக பறந்து வந்து அப்பளத்தை கொத்திக் கொண்டு போனது. இதை சன்னல் வழியாக ஒளிந்திருந்து அனைவரும் வேடிக்கை பார்த்தனர் .

சாப்பாடு எடுத்தாச்சு ….சாப்பாடு எடுத்தாச்சு…என்று கூப்பாடு போட்டனர்.
நம்மளை காக்க வைக்க கூடாதுன்னு உடனே வந்து சாப்பிட்டுட்டு போயிட்டாக.
இந்த காக்கா எங்க மாமியா மாதிரி இருக்கு …அவுக இப்படித்தான் மொதல்ல அப்பளம் சாப்பிடுவாக.

பாவம் …மாமியான்னு நெனைச்சு அப்புறமா கல்லகில்ல விட்டு எறிஞ்சுராதே. சீனாதான்னா ஜோக் அடித்தார்.

அப்புறம் என்ன சாப்பிட வேண்டியது தானே ?


அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டது.

சாப்பிடும் போதே முகுந்தன் கேட்டான் . காக்காயை நமது முன்னோர்கள்ன்னு சொல்றாங்க அதே சமயம் காக்கா சனீஸ்வர பகவானுக்கு வாகனம்னு சொல்றாங்க. இது எப்படி?
டேய் …டேய் …சாப்பாடெ பாத்து சாப்பிடு. ஒரு குரல் அதட்டியது.

பதில் சொல்ல முடியலைன்னா இப்படித்தான்.

ஏன்டா …முகுந்தா நம்ம சூரியன்
149,600,000 கிலோ மீட்டருக்கு அப்பால இருந்து நமக்கு ஒளியை கொடுக்கலையா . அந்த சூரிய வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வச்சுக்கிட்டு இந்த பூமியில உயிரினம் வாழலையா . இதையெல்லாம் நாம தினமும் நெனைச்சுப் பாக்கிறோமா ? . இல்லையே .

எப்பவாவது வெயில் கொளுத்துச்சுன்னா, அப்பப்பா என்ன வெயிலுன்னு சொல்லி சமாதானப் படுத்திக்கிறோம் .என்ன செய்ய முடியுது. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்டா. எல்லாமே மனிதனின் மனசை நல்வழிப்படுத்துறதுக்காகவும் , மனிதப்பிறவி புனிதப்பிறவிங்கிறதை ஞாபகப்படுத்துறதுக்காகவும் தான் சாஸ்த்திரங்களும் சம்பிரதாயங்களும். இல்லைன்னா நமக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் . விலங்குகளாவது அதனதன் விதிமுறைகளை மீறாது. இயற்கையின் நியதிப்படிதான் வாழ்கிறது. மனிதன் அப்படியல்ல அவனுடைய சௌகரியத்துக்கு தக்கபடி விதிகளை மாற்றிக்கொள்வான் . அவ்வாறு அவன் விருப்பப்படி நடக்கத்தொடங்கினால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான் அதனால்தான் மனிதனுக்கு சடங்குகள் சம்பிரதாயங்கள் தேவைப்படுகின்றன. என்றார் சீனாதானா.

இந்த 149,600,000 கிலோமீட்டரை கடந்து ஒளி சுமார் 8 நிமிசத்துல பூமியை வந்தடையுதாம். அப்போ இறைவன் கூப்பிட்ட உடனே வரனும்ன்னா எவ்வளவு வேகத்துல வரனும் பாத்துக்கோ…ஏன்னா அவரு நம்ம பக்கத்துலயும் இருக்கலாம் இல்ல இந்த ப்ரபஞ்சத்துல நம்ம சூரியகுடும்பத்துக்கு அப்பால எந்த இடத்திலேயும் இருக்கலாம். நம்ம அருகில் உள்ளவனும் மிக தொலைவில் உள்ளவனும் அவனே.

பேசாமெ சாப்பிடுறீங்களா…சாப்பிடும் போது என்ன பேச்சு . பாட்டி அதட்டினாள்.

நினைவு நாள்ல அவுங்களை நினைச்சு மௌனமா இருக்கிறதைவிட்டுட்டு அதைப்பத்தியே தர்க்கம் பண்ணிண்டு இருக்கேளே .

அப்போ பேசாமெ எல்லோரும் சாப்பிடாமெ வெரதம் இருந்துருக்கலாமே என்னத்துக்கு வடை பாயாசத்தோட
சாப்பாடு.


அடேய் முகுந்தா …இந்த சாப்பாடெல்லாம் அவுகளுக்கு . அவுக பேரைச்சொல்லி அவுகளுக்கு படைச்சுட்டு நாம சாப்பிடுறோம் .உனக்கு எப்பத்தான் புத்தி வரப்போகுதோ. பக்திமானாட்டம் விழுந்து விழுந்து சாமி கும்பிடுறே ஆனா கேள்வியெல்லாம் குதர்க்கமா கேக்குறே.

கேள்வி கேக்க கேக்க தான் பாட்டி அறிவு வளரும்.

கேள்விதான் கேக்குறேயே தவிர அறிவு ஒன்னும் வளந்த மாதிரி தெரியலையே .

நான் கேக்குற கேள்விக்கு உன்னாலே பதில் சொல்ல முடியுதா? முடியலையே . அங்கேதான் அறிவு இருக்கு . அறியாம கேக்குற கேள்விக்கு தான் உன்னால பதில் சொல்ல முடியும் . அதுவும் ஓங்கிட்ட அறிவு இருந்தா.

என்னடா குழப்புறே…

சரிவுடு பாட்டி…

வீட்டின் கூரை வழியே வருகிற சூரிய வெளிச்சத்தின் வழியாக வரும் ஒளியில் எப்படி சிறுசிறு தூசுகள் மிதப்பது தெரிகின்றனவோ அதே போல கோடி கோடி கோள்களும் நட்சத்திரங்களும் சூரியன்களும் அண்டவெளியில் மிதக்கிறது என்று
திருவாசகம் சொல்கிறது விஞ்ஞான கருவிகள் இல்லாத காலத்தில் எப்படி சொல்ல முடிந்தது. இன்று அறிவியலும் இதைத்தான் ஆராய்ச்சிக்குப்பின் சொல்கிறது. இது உனக்கு தெரியுமா பாட்டி.

வேதகாலங்கள்ல ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் செல்லும் ஆற்றல் பெற்ற மனிதர்கள் இருந்தார்கள் அவர்களின் அறிவுக்கு தக்கபடி. அன்று ஆற்றலும் அறிவும்தான் பிரதானம். இன்னைக்கு வசதியுள்ளவன் பைக்கில போறான் .இன்னும் வசதியுள்ளவன் கார்ல போறான், அதைவிட வசதியுள்ளவன் ஏரோப்பிளேன்ல போறான் , அறிஞன் ராக்கெட்ல போறான் . இது போலத்தான் அந்தக்கால மனிதர்களும் தனது புத்தியையும் மந்திர தந்திர சக்திகளையும் பயன்படுத்தி ஆத்ம பயணம் செய்தார்கள் . அவர்கள் அறிந்தவற்றை எழுதி வைத்து சென்றார்கள் . அதே மந்திர எந்திர தந்திர சக்திகளை வேறு வகையில் இன்று பயன் படுத்துகிறோம். காலம் மாறும் போது கருத்தும் மாறும்ல .

எப்படி பாட்டி இதெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கே …

எங்களுக்கு அறிவியலும் தெரியும் ஆண்மீகமும் தெரியும் . உன்னையை மாதிரி ஒன்னைப்புடிச்சுகிட்டு இன்னென்னை விடுறவ கிடையாது . எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்.

பிரபஞ்சத்துக்கு உருவம் சொல்ல முடியுமா …வினாடிக்கு விநாடி மாறிக்கிட்டு இருக்கும். எங்கே மாற்றம்ன்னு ஒன்னு நடந்தாலும் அதனோட தொடர்ச்சி மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டுத்தான் இருக்கும் மாற்றம் நம்மை தொடுவதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம்.

சரி பாட்டி …திதி கொடுத்தோமே …இன்னேரம் அவங்க வந்து சாப்பிட்டுருப்பாங்களா …

அட கிறுக்கா…எப்ப நீ அவங்களுக்காக திதி கொடுக்கனும்னு ஏற்பாடு பண்ணினாயோ அப்பவே வந்து காத்திருப்பாங்க …எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு இன்னேரம் அவங்க எடத்துக்கு போயிருப்பாங்க.

ஒரு சிலருக்கு முப்பது நாப்பது வருடம் தொடர்ந்து திதி கொடுக்கிறாங்களே …அது எப்படி? அவங்களுக்கெல்லாம் மறு பிறவி கிடையாதா ? மறு பிறவி எடுத்தவங்களுக்கு ஏன் தொடந்து திதி கொடுக்கனும். முப்பது நாப்பது வருசமா வேறெ பிறவி எடுக்காமலா இருப்பாங்க . அப்ப எதுக்கு தொடர்ந்து திதி கொடுக்கனும்.

மறுபிறவி எடுத்துட்டாங்களா இல்லையான்னு நம்மளாலே எப்படி சொல்ல முடியும் . அவங்கவங்க கர்ம வினைப்படி பிறவி எடுப்பாங்க. நீ ஒரு நாளைக்கு கொஞ்சம் அவங்களுக்காக உன்னுடைய நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யப் போறே அதை தவறாது செய்ய வேண்டியது தானே . இதனாலே என்ன கொறைஞ்சு போயிறப் போறோம் . ஒரு வேளை அவங்க பிறவி எடுக்காமல் இருந்தா , அவங்களை பட்டினி போட்டது போல ஆகாதா ? ஒவ்வொரு திதியின் போதும் முன்னோர்கள் எல்லோம் வர்றாங்கன்னு சொல்றாங்களே …அதில வர்றவங்க அனுபவிச்சிட்டு போறாங்க . இதற்கு மேலும் நம்மளை பெத்தவங்களை வருசம் ஒரு தடையாவது நினைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது இல்லையா ? இந்த மாதிரியான ஐதீகங்கள் இல்லைன்னா காலப்போக்கில வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமே போகும். மூச்சுவிடாமல் பாட்டி பேசினாள்.

நல்லா பேசுற பாட்டி …ஆனா நம்பத்தான் முடியலை.

வாழ்க்கையிலே நுணுக்கமான விசயங்கள் …பெரிய விசயங்கள் எல்லாம் நம்ப முடியாததா இருக்கும்…நாம நம்பக் கூடிய விசயங்கள் சில நேரம் நம்பக் கூடாததா , நம்ப முடியாததா இருக்கும் . ஏமாற்றம் தரும்.

கடவுள் இருக்கார்னு நம்பிக்கையோட இருந்து கடைசி கால கட்டத்தில கடவுள்ன்னு ஒன்னு இல்ல பொய்தான்னு தெரிஞ்சா , கடவுள் இருக்கார்ன்னு நம்புனவனுக்கு பெரிய பாதிப்பு ஒன்னும் இல்ல . கடவுள் இல்ல இல்லன்னு சொல்லி கடைசி காலத்துல கடவுள்
இருக்கார்ன்னு தெரிஞ்சா அவனுக்கு இதைவிட ஏமாற்றமும் துக்கமும் எதுவும் இல்ல. அதனால நம்பிக்கை வைக்கிறது தவறு இல்ல மூட நம்பிக்கை மட்டும் வைக்க கூடாது.

நம்மை உருவாக்கி வளர்த்து , பாராட்டி சீராட்டி, மனிதனாக்கிய பெற்றோரை வருடத்தில் ஒரு நாள் நினைத்து திதி கொடுப்பதில் தவறில்லை . அது அவர்களுக்கு போய் சேருகிறதோ இல்லையோ , பொய்யோ… நிஜமோ… மூட நம்பிக்கையோ…அவர்களை குடும்பத்தினர் அனைவரும் நினைத்து வணங்க ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது அல்லவா அது நிஜம்தானே! பாட்டி முகுந்தனைப்பார்த்து கேட்டாள்.

படிப்பறிவில்லாத பாட்டியின் விளக்கம் முகுந்தனை சிந்திக்க வைத்தது.

Monday, 13 April, 2009

புத்தாண்டு வாழ்த்து...

அன்பு பொங்கும் ஆண்டாய்
ஆறுகள் இணையும் ஆண்டாய்
இதயம் நிறையும் ஆண்டாய்
ஈகை பெருகும் ஆண்டாய்
உண்மை வளரும் ஆண்டாய்
ஊக்கம் பிறக்கும் ஆண்டாய்
எங்கும் வளர்ச்சியடைய
ஏழை உயர்ச்சியடைய
பொங்கும் மகிழ்ச்சிக்கடலில்
பூவின் அழகைப்போல
எங்கும் மக்கள் வாழ
என்றும் வாழ்த்தும் என் உள்ளம்.

Thursday, 26 March, 2009

அன்பர் கண்டிணங்கு. ( குருமதிமாலை )

சட்டமுந் தவிர்த்திறைவன்
கட்டளைகடந்து கூடாத்
துட்டரோடுகூடி யாடுறாய்-வயோதிகத்தில்
கெட்டலைந்து மாண்டுபோகுவாய்.


கருத்துரை :- இறைவனிட்ட கட்டளைகளையும் உனக்கியல்பாயுள்ள
விதிகளையுந் தவிர்த்து கயவர்களோடு கூடினால், நீ தள்ளாடிய காலத்தில் தட்டுத்தடுமாறி கெட்டழிந்து போகுவாயென்பதையுணர்ந்து, உத்தமர்களைக்கண்டு உறவாடு!