ஒரு காட்டிலே சின்ன மரத்திலே சிறிய கூட்டிலே ஒரு வயசான கழுகு வாழ்ந்து வந்தது. அது எப்போதுமே தனியாக பறந்து சென்று இரை தேடுவது வழக்கம். வழக்கமா இரை தேட பறந்து செல்லும் வழியில் மரங்கொத்தி ஒன்று கழுகை சந்தித்தது.
நாம ரெண்டு பேரும் சேர்ந்து இரை தேடலாமா ? மரங்கொத்தி கேட்டது.
கழுகு சிறகை விரித்து சிந்தித்தது. நான் தனியா இரை தேடுறது தான் வழக்கம். எனக்கு இல்லை யாரு கூடயும் பழக்கம். அதற்கு என்னால சொல்ல முடியாது விளக்கம் என்றது. ஆனா நீ கேக்குற சேர்ந்து இரை தேடலாமான்னு…என்னால மறுக்க முடியால .சரி…நம்ம சேந்தே இரை தேடலாம் என்றது கழுகு.
மரங்கொத்திக்கு சந்தோசம். அதப் பாக்க கழுகுக்கும் ரொம்ப சந்தோசமானது. காலைல கழுகின் கூட்டுக்கு மரங்கொத்தி வந்து அழைத்தது. இரண்டும் இரை தேட பறந்து சென்றது.
போகிற வழியில் கழுகு பறப்பதை மரங்கொத்தி ஆச்சிரியமாகப் பார்த்தது.
கழுகன்னா…நானும் உன்னைப்போல பறக்கனும். நீ நிறைய வித்தை காட்ற…உயர பறந்துக்கிட்டு இருக்கிற நீ சட்டுன்னு எப்படி கீழே வந்து இரையை கொத்திக்கிட்டு போறே …இதெல்லாம் எனக்கு சொல்லிக் கொடு என்றது.
சரி …சொல்லிக்கொடுக்கிறேன் என்றது கழுகு.
மரங்கொத்திக்கு கழுகைப் போல ஆக வேண்டும் என்று அளவு கடந்த ஆசை. எப்போதும் கழுகையே சுற்றி வந்தது.
இதைக் கண்ட கழுகு மரங்கொத்தி தனது மேல் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்று நினைத்து அதன் மேல் அன்பைப் பொழிந்தது. மரங்கொத்தியிடம் தனது முழுமனதையும் பறி கொடுத்தது. தனது சகோதரனாகவே நினைத்தது. தனது சொந்த கதை சோகக்கதை எல்லாவற்றையும் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டது. புதிய உறவு கிடைத்ததில் கழுகுக்கு ஆனந்தம். இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
ஒரு நாள் மரங்கொத்தி கழுகைக் காணவரவில்லை. கழுகுக்கு ரொம்ப வேதனையானது. தான் போகும் வழியெல்லாம் மரங்கொத்தி எங்காவது தென்படாதா என்று தேடியது. மரங்கொத்தி அகப்படவில்லை.
திடீரென்று ஒரு நாள் மரங்கொத்தி வந்து நின்றது . என்ன ரொம்ப நாளா உன்னை காணமுடியவில்லை ஏன் என்று கேட்டது கழுகு.
என்னை என் கூட்டில் உள்ளவர்கள் சண்டை போட்டு துரத்தி விட்டார்கள் .அதனால் அங்குமிங்கும் அலைந்து அவர்கள் கண்ணில் படாமல் வேறு வேறு மரங்களில் தங்கியிருந்தேன் என்று கவலையோட கூறியது.
கழுகு அதற்கு ஆறுதல் சொன்னது. ஏன் அங்குமிங்குமாக அலைந்தாய் நாம் இருவரும் இந்த கூட்டில் ஒன்றாக வசித்திருக்கலாமே.
இனிமேல் அப்படித்தான் இருக்கப்போகிறேன் என்றது மரங்கொத்தி.
கழுகும் மரங்கொத்தியும் சேர்ந்து தனது கூட்டை பெரிதாக்கியது.
மரங்கொத்தியும் கழுகும் ஒன்றாக சேர்ந்து பறந்து திரிவதைக் கண்ட மற்ற பறவைகளைல்லாம் ஆச்சரியமாகப் பார்த்தது.
மரங்கொத்தியும் கழுகும் ஆனந்தமாக பறந்து திரிந்து இரை தேடுவதைக் கண்ட கரச்சான் குஞ்சு நானும் உங்களுடன் சேர்ந்து வசிக்க ஆசைப்படுகிறேன் என்றது. பக்கத்து கிளையில் உள்ள புறாவும் மைனாவும் நாங்களும் வருகிறோம் என்றது.
கரச்சான்குஞ்சின் வருகை கழுகுக்கு சந்தோசத்தை கொடுத்தது. மரங்கொத்தி யோசித்தது. மரங்கொத்தியைப் பார்த்து கழுகு சொன்னது இருந்துவிட்டு போகட்டும் எல்லோரும்; சேர்ந்து இரை தேடுவோம். இடம் கொடுப்பதால் குறைந்துவிடமாட்டோம் .
அனைவரும் சேர்ந்து இரை தேடும் போது பச்சைக்கிளிகள் அங்குமிங்குமாக பறந்து செல்வதைப் பார்க்கும் போது மரங்கொத்தி மனதில் சிறிது சலனம் ஏற்படுவது வழக்கம். பச்சைக்கிளியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் . பச்சைக்கிளி இருக்குமிடத்துக்கு பறந்து சென்று நீண்ட நேரம் அதன் பேச்சை ரசித்திருக்கும் .
மரங்கொத்தி பச்சைக்கிளியிடம் பேசிக்கொண்டிருப்பது பொறுக்காமல் கரச்சான்குஞ்சு கழுகிடம் வந்து ஏதாவது சொல்லும். நம்ம வேளையை நம்ம பாப்போம் அது வரும் போது வரட்டும் என்று சொல்லி கரச்சான்குஞ்சை சமாதானப் படுத்தி இரை தேட தொடங்கும் கழுகு.
புறாவும் மைனாவும் தாவி தாவி எதையாவது கொத்தி தின்று கொண்டே நடக்கும். பேசுவது எதையும் கவனிக்காது. மரங்கொத்தி வந்தவுடன் கரச்சான்குஞ்சு அமைதியாகிவிடும்.
மரங்கொத்தி பச்சைக்கிளிகளைப் பத்தி பச்சை பச்சையாக சொல்லும் அந்தக்கிளி அப்படி…இந்தக்கிளி இப்படின்னு. எந்தக்கிளி எப்படியிருந்தா நமக்கென்ன நம்ம வேலையை நாம பாப்போம் என்று சமாதானப் படுத்தும்.
மரங்கொத்தி இப்படி பேசும் போதெல்லாம் கழுகு மரங்கொத்தியை திட்டும்.
உனக்கு வேறு எதுவும் பேசவே தெரியாதா என்று கோபப்படும்.
கழுகுக்கு எப்பவுமே ஆலோசனை சொல்றதே வேலையாப் போச்சு எப்பவாவது நம்மளோட சேர்ந்து பச்சைக்கிளியைப்பத்தி நாலு வார்த்தை சொல்லுதா…கெழட்டு கழுகு ரொம்ப மோசம் என்று மரங்கொத்தி மனதுக்குள் சளித்துக்கொண்டது.
புறாவும் மைனாவும் இப்பறவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது. மரங்கொத்தி, கரச்சான்குஞ்சு, கழுகு, போகும் உயரத்துக்கும் வேகத்துக்கும் புறாவும் மைனாவும் பறக்க முடியாமல் தனியாக இரை தேட தொடங்கியது.
திடீரென்று கழுகக்கு உடல் நிலை சரி இல்லாமல் போனது . மரங்கொத்தியும் கரச்சான்குஞ்சும் சேர்ந்து இரை தேடப்போனது.
இந்த கிழட்டு கழுகுக்கு எப்ப பாத்தாலும் அதை செய்யாதே இதைச் செய்யதேன்னு சொல்றதே வேலையாப் போச்சு ரொம்ப மோசம் இனிமே நாம ரெண்டு பேரும் சேந்தே இரை தேடலாம். இந்த கிழட்டு கழுகின் உறவு வேண்டாம் என்று தீர்மானம் போட்டது.
மரங்கொத்தி இல்லாத நேரத்துல கரச்சான்குஞ்சு மரங்கொத்தியைப் பத்தி நிறைய பேசும் . மரங்கொத்தி வந்துருச்சுன்னா அமைதியாகிடும். கரச்சான்குஞ்சு எப்பவுமே சுயநலத்தோட சுத்திவரும் . அழகா இருந்தா அல்லது வேலை ஏதாவது நடக்கனும்னா கரச்சான்குஞ்சு அப்படியே போயி ஒட்டிக்கிரும் . நாட்கள் போகப் போகத்தான் கரச்சான்குஞ்சின் மனநிலை கழுகுக்கு புரிந்தது.
கழுகு எப்பவுமே மனதில் எதையும் வச்சுக்கிறதில்ல .எல்லோரிடமும் சந்தோசமா இருக்கனும் பழகனுமின்னு நினைக்கும் , ஆனா கரச்சான்குஞ்சு வந்துதான் கழுகின் மனசுல நெருடல உண்டாக்கிருச்சு .மரங்கொத்தியின் மனதிலேயும் மாற்றத்தை உண்டாக்கிருச்சு .
மரங்கொத்தியின் விசயங்களை கரச்சான்குஞ்சுதான் அப்பப்ப வந்து கழுகுக்கு சொல்லும். கழுகும் கரச்சான்குஞ்சிடம் மனம்விட்டு பேசும் . அப்போதெல்லாம் கரச்சான்குஞ்சு எப்படியும் போகட்டும் நமக்கெதுக்கு என்று சொல்லி நல்ல பறவையாக நழுவி விடும்.
அமைதியா தனது இரையை தானே தேடிக்கொண்டிருந்த கழுகுக்கு கரச்சான்குஞ்சாலே மனம் சஞ்சலமானது. மரங்கொத்தியைவிட கரச்சான்குஞ்சு விபரமானது என்று கழுகுக்கு புரிந்தது. கரச்சான்குஞ்சின் பேச்சைக்கேட்டு மரங்கொத்தியை திட்டியது தவறு என்று கழுகுக்கு புரிந்தது. அதற்காக கழுகு வருந்தியது.
தொடர்ந்து கரச்சான்குஞ்சும் மரங்கொத்தியும் இரை தேட சென்றது கழுகின் கூட்டுக்கு இப்போதெல்லாம் வருவதில்லை. அதனால் கழுகும் வருத்தப்பட்டதாக தெரியவில்லை.
கழுகு உடல் நலம் சரியாகி வெளியில் இரை தேட பறந்து செல்லும் வழியில் மரங்கொத்தியையும் கரச்சான்குஞ்சையும் கண்டது அவை இரண்டும் கொக்கு கூட்டத்தினிடையில் எதையோ கொத்தி கொத்தி தின்று கொண்டு கொக்குகளிடம் விளையாடிக் கொண்டிருந்தன. கொக்குகள் பறந்து சென்றன மரங்கொத்தியும் கரச்சான்குஞ்சும் கொக்குகள் கூடவே பறந்தன.
கழுகுக்கு மகிழ்ச்சி …மரங்கொத்தியையும் கரச்சான்குஞ்சையும் பார்த்துக்கொண்டே தன்னை மறந்து போனது. சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்ட கழுகு தனது இரையை தேடிக் கொண்டு கூட்டுக்கு பறந்து சென்று அமைதியாக படுத்து உறங்கியது.
Monday 16 June 2008
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment