பரம்பிக்குளம் காடும் ஏரியும் படத்தில்.
வளைந்து நெளிந்து செல்லும் பெரிய மலைப்பாம்பு போல மலைப்பாதை. வண்டுகளில் மொத்த இரைச்சல் காதில் விழுகிறது. சட்டென்று நின்று விடுகிறது. மூங்கில் மரங்களில் காற்று நுழைந்து அது ஒரு விதமான இசையை உணடாக்குவது காட்டுக்குள்ளே ஒரு இசைக்கச்சேரி நடப்பது போன்று தோன்றியது.
திடீர் சலசலப்பு கரங்குரங்குகள் கிளைக்கு கிளை தாவி பவ்யமாக பார்க்கின்றன. அந்தப்பாதையின் நடுவில் பச்சை பசேலென்று சாணம் இப்போது தான் அந்தப்பாதையை காட்டு யானை கடந்து சென்றிருக்கிறது. கொஞ்ச தூரத்தில் யானையின் பிளிரல். மயில்கள் சாந்தமாக எதையோ கொத்தி கொத்தி தின்று கொண்டிருக்கின்றன. கழுத்தை உயர்த்தி திரும்பி பார்க்கின்றன. என்ன அழகு…சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நாணப்பட்டுக்கொண்டே நகர்கிறது.
இடது புறம் திரும்பினால் காட்டெருமை . அதன் கண்கள் மிளிர்கிறது , கொம்புகள் அகலமாக அழகாக வரைந்தது போல் இருக்கிறது. அதன் மேனி எத்தனை மினுமினுப்பு .திரும்பி நின்று முறைக்கிறது. ஒரு காட்டெருமை முறைத்ததும் எல்லா காட்டெருமையும் முறைக்கிறது. பின் அமைதியாக மேய ஆரம்பித்து விட்டது.
மூங்கில் மரங்கள் கூட்டம் கூட்டமாக வானைத்தொட போட்டி போட்டுக் கொண்டிருந்தன .ஓங்கி உயர்ந்த தேக்கு மரங்கள் முரட்டு மரங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனதோ ஆஜானுபாகுவாய் அணிவகுத்து நின்றன.
பாதையோரம் வேர்களில் மண் அரிப்பு ஏற்பட்டும் விழாமல் நிற்கும் பிடிவாதமான காட்டுமரங்கள். அசையாத அலைகளாக மலைகளின் மடிப்புகள் .எத்தனை உயரம்! மேலே இருந்து குதித்து பறக்க ஆசை . பூமியின் அழகு காடுகளில் தான் இருக்கிறது. ஆங்காங்கே கசியும் நீர்கள் ஓடைகள் ஆறுகள் ஏரிகள் என்று மலைகளில் மாறிமாறி காணும் போது கடவுளின் படைப்பு கற்பனைக்கு எட்டாதது என்பது உணர்வு பூர்வமாக உணர முடிகிறது. மலையின் உச்சியில் ஏரி அதுவும் கிட்டதட்ட 20 கி.மீட்டர் என்கிறார்கள் .
மலையின் உச்சியில் டீ கோப்பையை வைத்தது போல இயற்கை ஏரியை என்ன அழகாக படைத்திருக்கிறது.
மான் கூட்டங்கள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டு மிரளமிரளப் பார்க்கின்றன. ஒவ்வொரு மானும் உருவத்தில் மாடு போல் கொழுகொழுவென்று சுதந்திரமாக திரிவது கண்ணுக்கு விருந்தளித்தது.
சிறுத்தை வெயிலுக்கு மரத்தில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் மீசையில் ஒரு ஈ உக்கார
முன்னங்காலால் தட்டிவிட்டு தலையை தூக்கி உலுக்கியது. கண்களில் கோபக்கனல். இன்னும் சாப்டலை போல இருக்கு. அதுக்கு நூறடி தூரத்திலதான் மானெல்லாம் மேஞ்சிக்கிட்டுருக்கு.
காட்டுக்கோழி அமைதியாக மேய்ந்து கொண்டிருந்தது. சத்தம் கேட்டவுடன் பத்தடி உயரத்துக்கு மேலே கிளம்பி முப்பது அடி தூரம் வரை பறந்து சென்றது. ஒரு இறகு கூட உதிரவில்லை. மலர்கள் பூத்துக்குலுங்கின . உண்மையான ரோஜா…என்ன அழுகு …என்ன மணம்…தோட்டத்திலும் கடைகளிலும் பார்க்கும் ரோஜா அல்ல அது. எப்படி சொல்வது அந்த ரோஜாவை…அவ்வளவு அழகு…என்ன ஓரு நிறம்…
எத்தனை மடிப்புகள் …என்ன ஒரு மென்மை. கை பறிக்க சென்றது…மனம் வேண்டாமென்று தடுத்தது.
அழகை அழிக்க கூடாது, பார்த்து ரசிக்க வேண்டும் .இந்த ரோஜா இன்னும் எத்தனை கண்களுக்கு விருந்து படைக்க இருக்கிறதோ!.
தொட்டால் சுருங்கி செடிகள் தொடாமலே சுருங்கின சத்தத்தை கேட்டு அத்தனை நிசப்தம.; மரங்களில் இலைகளினூடே மின்மினிப்பூச்சிகள் காட்டில் சீரியல் செட் போட்டது போல அதற்கேற்றாற் போல விட்டு விட்டு வண்டுகளின் ரீங்காரம் , மின்மினிப்பூச்சிகளும் வண்டுகளும் சேர்ந்து காட்டுத்திருவிழாவில் பாட்டுக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தன. இதைக் கண்டு ரசிக்கும் போது வானலோகமோ சொர்க்கலோகமோ நம்மை நெருங்குவது போல தொன்றியது.
வானம் நமக்கு கீழே பஞ்சு மூட்டைகளாக நகர்ந்து மரத்தில் பட்டு கிழிகிறது. குளிர்சாதனப்பெட்டியை திறந்தது போல ஜில்லென்று காற்று.
காட்டுப்பன்றி குடும்பத்தை கூட்டிக்கொண்டு டென்ஷனோட போனது. முதுகில் முடி சிலிர்த்திருந்தது. திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு போனது . பாவம் அதற்கு என்ன பிரச்னையோ.
சித்தார்த் கேட்டான்…டாடி …இவ்வளவு அழகான காட்டை விட்டுட்டு ஏன் டாடி நம்மெல்லாம் வெளில வந்துட்டோம்.
ஸ்ஸ்ஸ்ஸ்…சத்தம் போட்டு பேசாதே… சிறுத்தை கண்ணை முழிச்சுரும்.
இப்ப புரிஞ்சு போச்சு ஏன் நாட்டுப்பக்கம் வந்துட்டீங்கன்னு …பயந்தாங்கொள்ளி.
மறுநாள் மலையை விட்டு கார் கீழே இறங்க இறங்க மனம் காட்டையே சுற்றி வந்தது…மனதில் இனம் புரியாத கனம். தேனின் சுவையை சொல்லி மற்றவருக்கு புரிய வைக்க முடியுமா ? முடியாது. அது போல அனுபவ சுவையை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. இன்னும் நினைத்தாலே இனிக்கிறது.
இந்த இனிமையான இயற்கை காட்சிகள் பரம்பிக்குளம் காட்டில் தான் பரவிக்கிடக்கின்றன.
பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை போகும் வழியில் சேத்துமடை கிராமத்திலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் ல் இருக்கிறது பரம்பிக்குளம். பார்த்து பரவசமடையலாம். குழந்தைகள் குதூகலமடைவார்கள்.
