அப்பா…இறந்து ஒரு வருஷமாச்சு. காலம் போனதே தெரியல. இந்நேரம் அப்பா இருந்தா வீடு எவ்வளவு கலகலன்னு இருக்கும் . அதுக்கு கொடுத்து வைக்கலை. ஆனா அப்பா இருக்கும் போது இவ்வளவு சொந்தம் பந்தம் வந்ததில்லை. இன்னிக்கு சொந்தமெல்லாம் இருக்காங்க ஆனா அப்பா இல்ல. வசந்திக்கு வருத்தமாக இருந்தது.
பத்திலிருந்து பதினொன்னரை வரை நல்ல நேரம் திதி கொடுக்க அய்யரை இன்னும் காணாம், நேரம் ஆகிக்கிட்டு இருக்கு …முகுந்தா போன் பண்ணிப்பாரு பாட்டி சொன்னாள்.
அவள் சொல்லி முடிக்க, புரோகிதர் வாசலில் டிவிஎஸ் பிஃப்டியில் வந்து நின்றார்.
வாங்க…வாங்க
இந்த பையை கொஞ்சம் புடிங்கோ…செங்கல் மணலெல்லாம் தயாரா இருக்கா?
எல்லாம் தயாரா இருக்கு.
புரேகிதர் நடு ஹாலில் ஹோமம் வளர்த்தார். மந்திரங்களை உச்சரித்தார். ஹோமத்தில் நெய்யை வார்த்தார். தான் செய்வதையும் சொல்வதையும் ராமுவை சொல்லச் செய்தார். ராமுவை எழுந்து நின்று வணங்க செய்தார். வீடு முழுக்க ஹோமியம் தெளித்தார். அனைவரையும் ஹோமகுண்டத்தின் முன் விழுந்து வணங்க சொன்னார். அனைவரின் நெற்றியிலும் விபூதி சந்தனம் குங்குமம் வைத்தார். செல்லம்மாவை அழைத்தார் ஒரு கைப்பிடி அரிசி கொடுத்து உலையில் போடச் சொன்னார். அரிசி பருப்பு காய்கறி பணம் ஆகியவற்றை எடுத்து அவர் பைகளில் போட்டார்.
இதோ பாருங்க வருஷா வருஷம் திதி கொடுக்கிறது ரொம்ப விசேஷம். நம்ம ஒரு வருஷத்துக்கு கொடுக்கிற திதி அவாளுக்கு ஒரு நாள் சாப்பாடு. நம்மோட முன்னோர்கள் எல்லோரும் நாம கொடுக்கிற திதியை சந்தோசமா ஏத்துக்கிட்டு நம்மல ஆசீர்வாதம் பண்ணுவாங்க . அவாளோட ஆசீர்வாதம் நம்மளை வாழவைக்கும். சரி சாப்பாடு தயார் ஆனதும் காகத்துக்கு படைச்சுட்டு சாப்பிடுங்க.
இந்தா தம்பி இதையெல்லாம் கொண்டு போயி கால் படாத இடத்துல போட்டு வந்திரு . ஏதாவது தண்ணி இருக்கிற இடமா போட்டா ரெம்ப நல்லது. போட்டுட்டு திரும்பி பாக்காம வந்திருங்க. யாராவது அவரு கூட போங்க. அப்ப நான் கிளம்புறேன்.
வீட்ல பெண்களெல்லாம் சமையலில் கவனம் செலுத்த ஆண்கள் அரசியலிலும் நாட்டு நடப்பிலும் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தனர். அப்பாவைப்பற்றியும் அவ்வப்போது பேச்சு அடிபட்டது. அப்பாவைப் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் எனக்கு அவரது கம்பீர தோற்றம் கண்முன் வந்து நிற்கும் . என்னால இன்னும் மறக்க முடியலை . என்ன செய்ய!.
ஏய் …வசந்தி என்ன பண்றே …பாயாசத்தே கொஞ்சம் பாரு… புடிச்சிற போகுது. போதும்னா எறக்கிவச்சிரு. வாசனை வர்ற மாதிரி தெரியுது.
சரிம்மா …என்று அடுக்களையில் நுழைந்தாள் வசந்தி.
காகங்கள் கரைந்து கொண்டே வீட்டின் மதில் சுவர்களில் வந்து அமர்ந்திருந்தன. காகங்கள் நமது மூதாதையர்கள் என்பது ஐதீகம். அப்படியென்றால் நமது மூதாதையர்கள் நம்மை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா?. ஒரு நாளைக்கு எத்தனை காக்கா நம்ம வீட்டு கூரையில வந்து உக்காருது. மூதாதையர்கள் ஏன் காகமாக வந்து பிறக்க வேண்டும். ஒட்டு மொத்த மக்களின் மூதாதையரின் எண்ணிக்கையை விட காகங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே?. இன்று இங்கு வந்து உணவு அருந்திய காகமே நாளை பக்கத்து வீட்டுக்கும் செல்கிறதே. காகம் மூதாதையர் என்று சொன்னால் இன்று நமது மூதாதையர் நாளை எப்படி வேறொருவருக்கும் மூதாதையர் ஆவார்.
ஒரு குடும்பத்துக்கு ஒரு காகமா ? கூட வரும் காகமெல்லாம் அவர்களின் நண்பர்களா? எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
இலையை இரண்டாக கிழித்து அதில் சாதம் சாம்பார்,ரசம், கூட்டு,பொரியல்,மோர், அப்பளம், பாயாசம் , என்று அனைத்து வகைகளையும் வைத்து மதில் மேல் வைத்தவுடன் ஒரு காகம் வேகமாக பறந்து வந்து அப்பளத்தை கொத்திக் கொண்டு போனது. இதை சன்னல் வழியாக ஒளிந்திருந்து அனைவரும் வேடிக்கை பார்த்தனர் .
சாப்பாடு எடுத்தாச்சு ….சாப்பாடு எடுத்தாச்சு…என்று கூப்பாடு போட்டனர்.
நம்மளை காக்க வைக்க கூடாதுன்னு உடனே வந்து சாப்பிட்டுட்டு போயிட்டாக.
இந்த காக்கா எங்க மாமியா மாதிரி இருக்கு …அவுக இப்படித்தான் மொதல்ல அப்பளம் சாப்பிடுவாக.
பாவம் …மாமியான்னு நெனைச்சு அப்புறமா கல்லகில்ல விட்டு எறிஞ்சுராதே. சீனாதான்னா ஜோக் அடித்தார்.
அப்புறம் என்ன சாப்பிட வேண்டியது தானே ?
அனைவருக்கும் உணவு பறிமாறப்பட்டது.
சாப்பிடும் போதே முகுந்தன் கேட்டான் . காக்காயை நமது முன்னோர்கள்ன்னு சொல்றாங்க அதே சமயம் காக்கா சனீஸ்வர பகவானுக்கு வாகனம்னு சொல்றாங்க. இது எப்படி?
டேய் …டேய் …சாப்பாடெ பாத்து சாப்பிடு. ஒரு குரல் அதட்டியது.
பதில் சொல்ல முடியலைன்னா இப்படித்தான்.
ஏன்டா …முகுந்தா நம்ம சூரியன் 149,600,000 கிலோ மீட்டருக்கு அப்பால இருந்து நமக்கு ஒளியை கொடுக்கலையா . அந்த சூரிய வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வச்சுக்கிட்டு இந்த பூமியில உயிரினம் வாழலையா . இதையெல்லாம் நாம தினமும் நெனைச்சுப் பாக்கிறோமா ? . இல்லையே .
எப்பவாவது வெயில் கொளுத்துச்சுன்னா, அப்பப்பா என்ன வெயிலுன்னு சொல்லி சமாதானப் படுத்திக்கிறோம் .என்ன செய்ய முடியுது. எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்டா. எல்லாமே மனிதனின் மனசை நல்வழிப்படுத்துறதுக்காகவும் , மனிதப்பிறவி புனிதப்பிறவிங்கிறதை ஞாபகப்படுத்துறதுக்காகவும் தான் சாஸ்த்திரங்களும் சம்பிரதாயங்களும். இல்லைன்னா நமக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் . விலங்குகளாவது அதனதன் விதிமுறைகளை மீறாது. இயற்கையின் நியதிப்படிதான் வாழ்கிறது. மனிதன் அப்படியல்ல அவனுடைய சௌகரியத்துக்கு தக்கபடி விதிகளை மாற்றிக்கொள்வான் . அவ்வாறு அவன் விருப்பப்படி நடக்கத்தொடங்கினால் மனிதன் மனிதனாக இருக்க மாட்டான் அதனால்தான் மனிதனுக்கு சடங்குகள் சம்பிரதாயங்கள் தேவைப்படுகின்றன. என்றார் சீனாதானா.
இந்த 149,600,000 கிலோமீட்டரை கடந்து ஒளி சுமார் 8 நிமிசத்துல பூமியை வந்தடையுதாம். அப்போ இறைவன் கூப்பிட்ட உடனே வரனும்ன்னா எவ்வளவு வேகத்துல வரனும் பாத்துக்கோ…ஏன்னா அவரு நம்ம பக்கத்துலயும் இருக்கலாம் இல்ல இந்த ப்ரபஞ்சத்துல நம்ம சூரியகுடும்பத்துக்கு அப்பால எந்த இடத்திலேயும் இருக்கலாம். நம்ம அருகில் உள்ளவனும் மிக தொலைவில் உள்ளவனும் அவனே.
பேசாமெ சாப்பிடுறீங்களா…சாப்பிடும் போது என்ன பேச்சு . பாட்டி அதட்டினாள்.
நினைவு நாள்ல அவுங்களை நினைச்சு மௌனமா இருக்கிறதைவிட்டுட்டு அதைப்பத்தியே தர்க்கம் பண்ணிண்டு இருக்கேளே .
அப்போ பேசாமெ எல்லோரும் சாப்பிடாமெ வெரதம் இருந்துருக்கலாமே என்னத்துக்கு வடை பாயாசத்தோட சாப்பாடு.
அடேய் முகுந்தா …இந்த சாப்பாடெல்லாம் அவுகளுக்கு . அவுக பேரைச்சொல்லி அவுகளுக்கு படைச்சுட்டு நாம சாப்பிடுறோம் .உனக்கு எப்பத்தான் புத்தி வரப்போகுதோ. பக்திமானாட்டம் விழுந்து விழுந்து சாமி கும்பிடுறே ஆனா கேள்வியெல்லாம் குதர்க்கமா கேக்குறே.
கேள்வி கேக்க கேக்க தான் பாட்டி அறிவு வளரும்.
கேள்விதான் கேக்குறேயே தவிர அறிவு ஒன்னும் வளந்த மாதிரி தெரியலையே .
நான் கேக்குற கேள்விக்கு உன்னாலே பதில் சொல்ல முடியுதா? முடியலையே . அங்கேதான் அறிவு இருக்கு . அறியாம கேக்குற கேள்விக்கு தான் உன்னால பதில் சொல்ல முடியும் . அதுவும் ஓங்கிட்ட அறிவு இருந்தா.
என்னடா குழப்புறே…
சரிவுடு பாட்டி…
வீட்டின் கூரை வழியே வருகிற சூரிய வெளிச்சத்தின் வழியாக வரும் ஒளியில் எப்படி சிறுசிறு தூசுகள் மிதப்பது தெரிகின்றனவோ அதே போல கோடி கோடி கோள்களும் நட்சத்திரங்களும் சூரியன்களும் அண்டவெளியில் மிதக்கிறது என்று திருவாசகம் சொல்கிறது விஞ்ஞான கருவிகள் இல்லாத காலத்தில் எப்படி சொல்ல முடிந்தது. இன்று அறிவியலும் இதைத்தான் ஆராய்ச்சிக்குப்பின் சொல்கிறது. இது உனக்கு தெரியுமா பாட்டி.
வேதகாலங்கள்ல ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நினைத்த மாத்திரத்தில் செல்லும் ஆற்றல் பெற்ற மனிதர்கள் இருந்தார்கள் அவர்களின் அறிவுக்கு தக்கபடி. அன்று ஆற்றலும் அறிவும்தான் பிரதானம். இன்னைக்கு வசதியுள்ளவன் பைக்கில போறான் .இன்னும் வசதியுள்ளவன் கார்ல போறான், அதைவிட வசதியுள்ளவன் ஏரோப்பிளேன்ல போறான் , அறிஞன் ராக்கெட்ல போறான் . இது போலத்தான் அந்தக்கால மனிதர்களும் தனது புத்தியையும் மந்திர தந்திர சக்திகளையும் பயன்படுத்தி ஆத்ம பயணம் செய்தார்கள் . அவர்கள் அறிந்தவற்றை எழுதி வைத்து சென்றார்கள் . அதே மந்திர எந்திர தந்திர சக்திகளை வேறு வகையில் இன்று பயன் படுத்துகிறோம். காலம் மாறும் போது கருத்தும் மாறும்ல .
எப்படி பாட்டி இதெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கே …
எங்களுக்கு அறிவியலும் தெரியும் ஆண்மீகமும் தெரியும் . உன்னையை மாதிரி ஒன்னைப்புடிச்சுகிட்டு இன்னென்னை விடுறவ கிடையாது . எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்.
பிரபஞ்சத்துக்கு உருவம் சொல்ல முடியுமா …வினாடிக்கு விநாடி மாறிக்கிட்டு இருக்கும். எங்கே மாற்றம்ன்னு ஒன்னு நடந்தாலும் அதனோட தொடர்ச்சி மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்திக்கிட்டுத்தான் இருக்கும் மாற்றம் நம்மை தொடுவதற்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம்.
சரி பாட்டி …திதி கொடுத்தோமே …இன்னேரம் அவங்க வந்து சாப்பிட்டுருப்பாங்களா …
அட கிறுக்கா…எப்ப நீ அவங்களுக்காக திதி கொடுக்கனும்னு ஏற்பாடு பண்ணினாயோ அப்பவே வந்து காத்திருப்பாங்க …எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு இன்னேரம் அவங்க எடத்துக்கு போயிருப்பாங்க.
ஒரு சிலருக்கு முப்பது நாப்பது வருடம் தொடர்ந்து திதி கொடுக்கிறாங்களே …அது எப்படி? அவங்களுக்கெல்லாம் மறு பிறவி கிடையாதா ? மறு பிறவி எடுத்தவங்களுக்கு ஏன் தொடந்து திதி கொடுக்கனும். முப்பது நாப்பது வருசமா வேறெ பிறவி எடுக்காமலா இருப்பாங்க . அப்ப எதுக்கு தொடர்ந்து திதி கொடுக்கனும்.
மறுபிறவி எடுத்துட்டாங்களா இல்லையான்னு நம்மளாலே எப்படி சொல்ல முடியும் . அவங்கவங்க கர்ம வினைப்படி பிறவி எடுப்பாங்க. நீ ஒரு நாளைக்கு கொஞ்சம் அவங்களுக்காக உன்னுடைய நேரத்தையும் பணத்தையும் செலவு செய்யப் போறே அதை தவறாது செய்ய வேண்டியது தானே . இதனாலே என்ன கொறைஞ்சு போயிறப் போறோம் . ஒரு வேளை அவங்க பிறவி எடுக்காமல் இருந்தா , அவங்களை பட்டினி போட்டது போல ஆகாதா ? ஒவ்வொரு திதியின் போதும் முன்னோர்கள் எல்லோம் வர்றாங்கன்னு சொல்றாங்களே …அதில வர்றவங்க அனுபவிச்சிட்டு போறாங்க . இதற்கு மேலும் நம்மளை பெத்தவங்களை வருசம் ஒரு தடையாவது நினைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது இல்லையா ? இந்த மாதிரியான ஐதீகங்கள் இல்லைன்னா காலப்போக்கில வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமே போகும். மூச்சுவிடாமல் பாட்டி பேசினாள்.
நல்லா பேசுற பாட்டி …ஆனா நம்பத்தான் முடியலை.
வாழ்க்கையிலே நுணுக்கமான விசயங்கள் …பெரிய விசயங்கள் எல்லாம் நம்ப முடியாததா இருக்கும்…நாம நம்பக் கூடிய விசயங்கள் சில நேரம் நம்பக் கூடாததா , நம்ப முடியாததா இருக்கும் . ஏமாற்றம் தரும்.
கடவுள் இருக்கார்னு நம்பிக்கையோட இருந்து கடைசி கால கட்டத்தில கடவுள்ன்னு ஒன்னு இல்ல பொய்தான்னு தெரிஞ்சா , கடவுள் இருக்கார்ன்னு நம்புனவனுக்கு பெரிய பாதிப்பு ஒன்னும் இல்ல . கடவுள் இல்ல இல்லன்னு சொல்லி கடைசி காலத்துல கடவுள் இருக்கார்ன்னு தெரிஞ்சா அவனுக்கு இதைவிட ஏமாற்றமும் துக்கமும் எதுவும் இல்ல. அதனால நம்பிக்கை வைக்கிறது தவறு இல்ல மூட நம்பிக்கை மட்டும் வைக்க கூடாது.
நம்மை உருவாக்கி வளர்த்து , பாராட்டி சீராட்டி, மனிதனாக்கிய பெற்றோரை வருடத்தில் ஒரு நாள் நினைத்து திதி கொடுப்பதில் தவறில்லை . அது அவர்களுக்கு போய் சேருகிறதோ இல்லையோ , பொய்யோ… நிஜமோ… மூட நம்பிக்கையோ…அவர்களை குடும்பத்தினர் அனைவரும் நினைத்து வணங்க ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது அல்லவா அது நிஜம்தானே! பாட்டி முகுந்தனைப்பார்த்து கேட்டாள்.
படிப்பறிவில்லாத பாட்டியின் விளக்கம் முகுந்தனை சிந்திக்க வைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment